டப்ளோ கிறிஸ்தவ தேவாலய தாக்குதல்; 6 பேர் பலி

டப்ளோ கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்; 6 பேர் பலி

by Fazlullah Mubarak 13-05-2019 | 8:32 AM

Colombo (News 1st) மேற்கு ஆபிரிக்க நாடான பேர்கினா பசோவின் (Burkina Faso) டப்ளோ (Dablo) நகரிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில், கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாக்குதல்தாரிகளால் தேவாலயம் மற்றும் அதனை அண்மித்து காணப்பட்ட ஏனைய கட்டடங்கள் எரியூட்டப்பட்டதாகவும் வைத்திய நிலையமொன்று கொள்ளையிடப்பட்டதாகவும் நகர மேயர் ஊஸ்மன் ஸொங்கோ (Ousmane Zongo) தெரிவித்துள்ளார். குறித்த தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேர்கினோ பசோவில் கடந்த 5 வாரங்களில் தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது தாக்குதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. புர்கினா பசோவில் 2016 ஆம் ஆண்டிலிருந்து வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தேவாலய தாக்குதல் சம்பவத்தையடுத்து, மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளதுடன், நகரத்தில் பதற்றம் நிலவிவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.