லோக்சபா – மக்களவைத் தேர்தலின் 6ஆம் கட்ட வாக்கெடுப்பு பூர்த்தி

லோக்சபா – மக்களவைத் தேர்தலின் 6ஆம் கட்ட வாக்கெடுப்பு பூர்த்தி

லோக்சபா – மக்களவைத் தேர்தலின் 6ஆம் கட்ட வாக்கெடுப்பு பூர்த்தி

எழுத்தாளர் Fazlullah Mubarak

13 May, 2019 | 8:29 am

7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்தியாவின் 6ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியாக நடந்து முடிந்துள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்திய மக்களவைத் தேர்தலுக்கான 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மாலை 7 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையகம் அறிவித்த தகவல்களின் பிரகாரம், 7 மாநிலங்களிலும் சராசரியாக 61.14 வீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 80.16 வீத வாக்குகளும் ஜார்கண்டில் 64.46 வீத வாக்குகளும் மத்திய பிரதேசத்தில் 60.40 வீத வாக்குகளும் ஹரியானாவில் 62.91 வீத வாக்குகளும்  உத்தரப்பிரதேசத்தில் குறைந்தபட்சமாக 53.37 வீத வாக்குகளும் பீஹாரில் 59.29 வீத வாக்குகளும் இந்தியத் தலைநகர் புதுடில்லியில் 56.11 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சில வன்முறை சம்பவங்களை தவிர வாக்களிப்பு பெரும்பாலும் அமைதியான முறையில் நடைபெற்றதாக இந்திய தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி 7ஆம் கட்ட வாக்களிப்பு இடம்பெறவுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து 23ஆம் திகதி வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய தேர்தல்களுள் ஒன்றாக இந்திய பொதுத் தேர்தலான லோக் சபா தேர்தல் கருதப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்