by Fazlullah Mubarak 13-05-2019 | 8:35 AM
ஐ.பி.எல். கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில், லசித் மாலிங்கவின் அதிரடி பந்துவீச்சால் மும்பை இந்தியன்ஸ் அணி, நான்காவது தடவையாகவும் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை 1 ஓட்டத்தால் தோல்வியடைச் செய்ததன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியை பதிவுசெய்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு குயின்டன் டி கொக் ஜோடி ஆரம்பத்தை வழங்கியது.
இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டில் அதிரடியாக 45 ஓட்டங்களை பகிர்ந்தார்கள்.
குயின்டன் டி கொக் 4 சிக்சர்களுடன் 17 பந்துகளில் 29 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
அணித்தலைவர் ரோஹித் சர்மா 15 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா 16 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
கீரன் பொலார்ட் இறுதிவரை களத்தில் நின்று 41 ஓட்டங்களை அதிரடியாக பெற்றார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களை பெற்றது.
தீபக் சஹார் 3 விக்கெட்களை வீழ்த்த , ஷர்துல் தாகூர் மற்றும் இம்ரான் தாகீர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
150 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பாக பெப் டு பிளசிஸ் 13 பந்துகளில் 26 ஓட்டங்களை பெற்றார்.
சுரேஷ் ரெய்னா 8 ஓட்டங்களையும் அம்பாத்தி ராயுடு ஓர் ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.
அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி 2 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, வெற்றி இலக்கை கடக்க 2 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்ட நிலையில் கைவசம் ஒரு பந்தை மாத்திரமே கொண்டிருந்தது.
இந்நிலையில், இறுதிப் பந்தில் லசித் மாலிங்க வீசிய பந்தில் விக்கட் வீழ்த்தப்பட, மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது தடவையாகவும் வெற்றிவாகை சூடியுள்ளது.