அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்காக அதிகபட்ச அதிகாரத்தை பயன்படுத்தத் தயார் – இராணுவத் தளபதி

அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்காக அதிகபட்ச அதிகாரத்தை பயன்படுத்தத் தயார் – இராணுவத் தளபதி

எழுத்தாளர் Staff Writer

13 May, 2019 | 8:32 pm

Colomno (News 1st) வட மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அதேநேரம், கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளை (14ஆம் திகதி) காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்றிரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

சிலாபம் மற்றும் வட மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலுள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கலகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட குழுக்களை அடையாளம் கண்டுள்ளதாக, லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க கூறியுள்ளார்.

இதனையடுத்து, இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து அமைதி நிலையை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இந்த நிலைமையை தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார்கள். இதன்போது புத்திசாதுர்யமாக செயற்படாதவர்கள் மீது தேவையேற்படின் பாதுகாப்புத் தரப்பினருடன் இணைந்து அதிகபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு இராணுவத்தினர் தயார் என்பதை, அப்பாவி மக்களின் சொத்துக்கள் மற்றும் உயிர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்த முயலும் மதுபோதையில் செயற்படுவோர் உள்ளிட்டவர்களுக்கு நினைவூட்டுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, வட மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையில், முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் சுமூகமான தீர்வொன்றைக் காண்பதற்கு இராணுவத்தினர் விரும்புவதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்