ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: இறுதிப் போட்டி இன்று

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: இறுதிப் போட்டி இன்று

by Staff Writer 12-05-2019 | 7:38 AM
Colombo (News 1st) பன்னிரெண்டாவது ஐ.பி.எல். போட்டியில் சம்பியன் கிண்ணத்தை சுவீகரிக்கவுள்ள அணியைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று (12ஆம் திகதி) நடைபெறவுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் களமிறங்கவுள்ள இந்தப் போட்டி, ஹைதராபத்தில் மாலை 7.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இவ்விரு அணிகளும் ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில் நான்காவது தடவையாக மோதவுள்ளன. மூன்று போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளன. இந்தத் தடவை ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்கு எதிராக களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 2 லீக் மற்றும் தகுதிச் சுற்று போட்டி என 3 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியடைந்தது. சென்னை அணி இதுவரை 8ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளதுடன், 3 போட்டிகளில் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. மும்பை அணி 5 ஆவது தடவையாகவும் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011, 2018 ஆண்டுகளிலும் மும்பை இந்தியன்ஸ் 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளிலும் ஐ.பி.எல். கிண்ணத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.