வவுணதீவில் பொலிஸார் இருவர் கொலையுண்டமை தொடர்பில் கைதான முன்னாள் போராளி விடுதலை

by Staff Writer 11-05-2019 | 8:19 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - வவுணதீவில் பொலிஸார் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி இன்று விடுதலை செய்யப்பட்டார். வவுணதீவில் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி பொலிஸார் இருவர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியான அஜந்தன் எனப்படும் கதிர்காமத்தம்பி ராஜகுமாரன் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடுப்புப் பிரிவில் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் விசாரணைகளின் போது, பொலிஸாரின் கொலைச் சம்பவத்தை தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு மேற்கொண்டிருந்தமை தெரியவந்தது. சஹ்ரான் ஹாசிமின் சாரதியான கஃபூர் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொலை செய்த மூவர் அடையாளம் காணப்பட்டனர். பொலிஸாரிடமிருந்து திருடப்பட்ட துப்பாக்கியொன்றும் நிந்தவூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். அதனையடுத்து, பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி அஜந்தன் இன்று விடுதலை செய்யப்பட்டார். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி தியாகேஸ்வரன் முன்னிலையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அஜந்தன் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். எதிர்வரும் 13ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி இதன்போது உத்தரவிட்டார்.