பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம்

பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம்; மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புக: பாதுகாப்பு செயலாளர் 

by Staff Writer 11-05-2019 | 4:13 PM
Colombo (News 1st) அனைத்து பாடசாலைகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையால், பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட கோரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு தரப்பினர் மீது நம்பிக்கை வைத்து மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறும் அவர் கோரியுள்ளார். நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல்களில் 95 வீதமானவை பாதுகாப்பு பிரிவினரால் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் அறிவித்துள்ளார். இதேவேளை, பயங்கரவாத அச்சுறுத்தல் என்ன என்பது குறித்து அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, முப்படையினர், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர் இணைந்து பொதுமக்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை முழுமையாக தணித்து, இயல்பு வாழ்க்கைக்கு மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டு வருவதாகவும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட சுட்டிக்காட்டியுள்ளார்.