கட்டளையை மீறி பயணித்த கார் மீது கடற்படையினர் துப்பாக்கிச்சூடு: சாரதி உயிரிழப்பு

கட்டளையை மீறி பயணித்த கார் மீது கடற்படையினர் துப்பாக்கிச்சூடு: சாரதி உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

11 May, 2019 | 4:28 pm

Colombo (News 1st) வத்தளை – ஹுணுபிட்டிய பகுதியில் கட்டளையை மீறி பயணித்த கார் மீது கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் காரின் சாரதி உயிரிழந்துள்ளார்.

ஹுணுபிட்டிய பகுதியில் காணப்படும் கடற்படையினரின் சோதனை சாவடிக்கருகில் நள்ளிரவு 12 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.

சோதனைச்சாவடியில் காரை நிறுத்துமாறு கடற்படையினர் கட்டளையிட்டுள்ளனர்.

எனினும், கட்டளையை மீறி சோதனைச்சாவடியை மோதிக்கொண்டு, குறித்த சாரதி தப்பிச்செல்ல முயன்ற போதே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதன்போது காயமடைந்த காரின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

அந்நபர் அதிக மதுபோதையில் காரை செலுத்தியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஹுணுபிட்டிய சோதனை சாவடிக்கருகில் இன்று அதிகாலை 1 மணியளவில் மற்றுமொரு காரும் கட்டளையை மீறி பயணிக்க முயன்றுள்ளது.

இதன்போது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காரின் சாரதி காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்நபர் மது போதையில் காரை செலுத்திய சட்டத்தரணி ஒருவர் என கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்புக் கருதி முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் பாதுகாப்பு பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்