மட்டக்களப்பு பல்கலை தொடர்பில் யோசனை முன்வைப்பு

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டத்தில் யோசனை முன்வைப்பு

by Staff Writer 10-05-2019 | 3:51 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை எதிர்காலத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடனோ அல்லது சுற்றுலாத்துறை அமைச்சின் கீழோ நடத்திச் செல்வது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்தார். நேற்று (09) நடைபெற்ற குழுக்கூட்டத்தின் போது இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டதாக அவர் கூறினார். அதனைத் தவிர, குறித்த பல்கலைக்கழகத்திற்கு சலுகைகளை வழங்கிய, பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கிய நிறுவனங்களின் அதிகாரிகளும் நேற்று நடைபெற்ற கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். நிறுவனங்களின் பதிவாளர் அலுவலகம், முதலீட்டு சபை, அரச வங்கி மற்றும் காணி திணைக்களத்தின் அதிகாரிகள் அழைக்கப்பட்டு, குறித்த பல்கலைக்கழகத்திற்காக வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் அனுமதிப் பத்திரங்களை ஆராய்ந்ததாக ஆஷூ மாரசிங்க தெரிவித்தார். இது தொடர்பிலான அறிக்கை இந்த மாத இறுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.