சட்ட அதிகாரங்கள் போதுமானதாக இல்லையா?

பயங்கரவாதிகளுக்கு தண்டனை வழங்கும் சட்ட அதிகாரங்கள் போதுமானதாக இல்லையா?

by Staff Writer 10-05-2019 | 9:09 PM
Colombo (News 1st) பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு சட்ட அதிகாரங்கள் போதுமானதாக இல்லையா என்பது தொடர்பில் இன்றைய சபை அமர்வில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. உயிர்த்த ஞாயிறன்று உயிரிழந்த இலங்கை பிரஜைகளின் சடலங்களின் மேலிருந்து, வௌிநாட்டு முதலாளிமாருக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, இந்த அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றியதா என்ற சந்தேகம் எழுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
உலகில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு புதிய சட்டமொன்று எமக்கு அவசியம் என்பது தொடர்பில் பிரதமர் அன்று சிந்தித்தார். அதனால் சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும் என எண்ணினார். 1978 ஆம் ஆண்டு 49 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தை அன்று கொண்டு வந்தார். புதிய இரண்டு திருத்தங்களுடன் இன்றும் அந்த சட்டம் நடைமுறையிலுள்ளது. வௌிநாட்டிற்கு சென்று பயிற்சிபெற்று வந்தால், வௌிநாட்டவர் ஒருவர் வந்து பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்டால், அந்த சட்டத்தின் கீழ் எந்தவொரு நபருக்கும் தண்டனை வழங்கும் சரத்துக்கள் அதிலுள்ளன. 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது என நான் எண்ணுகின்றேன். அப்போதைய வௌிவிவகார அமைச்சர் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக 30/1 பிரேரணையை நிறைவேற்றினர். வௌிவிவகார அமைச்சரின் பணிப்புரைக்கு அமையவே சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசசார்பற்ற அமைப்புகள் இதன் பின்புலத்திலுள்ளன.