இந்தியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் மீளனுப்பல் 

இந்தியாவில் சுற்றுலா விசாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

by Staff Writer 10-05-2019 | 5:10 PM
Colombo (News 1st) இந்தியாவில் சுற்றுலா விசாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் சிலர் மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக 'த ஹிந்து' செய்தி வௌியிட்டுள்ளது. இலங்கையில் தாக்குதல்களை மேற்கொண்ட குற்றவாளிகளுடன் சென்னையை சேர்ந்த சிலர் தொடர்பில் இருந்துள்ளதாக இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருந்தது. அதற்கமைய, கடந்த காலங்களில் தமிழகம் முழுவதும் தீவிர சோதனை நடடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. சென்னை மண்ணடியைச் சேர்ந்த ஒருவரிடம் மேற்கொண்ட விசாரணையின் ஊடாக, சென்னை - பூந்தமல்லியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் நபரொருவர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குறித்த தொடர்மாடியில் தங்கியிருக்கும் நபர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், அவர் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வௌிவந்துள்ளன. இலங்கையைச் சேர்ந்த 31 வயதான தனுகா ரோசன் என்ற நபர், தனது பெயரை சுதர்சன் என்று மாற்றி சென்னையில் வசித்து வந்துள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டதாக 'த ஹிந்து' செய்தி வௌியிட்டுள்ளது. இலங்கையில் குறித்த நபர் மீது கொலை வழக்கு இருப்பதனால், அவரது கடவுச்சீட்டை இலங்கை அரசு முடக்கியுள்ளதை அடுத்து, கள்ளத்தோணி மூலமாக இராமேஸ்வரம் ஊடாக தமிழகம் வந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. அங்கிருந்து சென்னை பூந்தமல்லிக்கு வருகை தந்துள்ள குறித்த நபர், போலிச்சான்றிதழ்கள் மூலம் சுதர்சன் என்ற பெயரில் ஆதார் அட்டை பெற்றுள்ளதாகவும் 'த ஹிந்து' செய்தி வௌியிட்டுள்ளது. பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தனுகா ரோசன், கடந்த 2 ஆம் திகதி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, அவரின் மனைவி, 5 வயது மகன் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட 8 பேர் சுற்றுலா விசாவில் இலங்கையில் இருந்து சென்னைக்கு சென்றுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், இவர்கள் 8 பேரும் நேற்று முன்தினம் இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.