மாணவர்களின் வருகையை கவனத்தில்கொள்ளாது கல்வி நடவடிக்கையை முன்னெடுக்குமாறு அமைச்சு கோரிக்கை

by Staff Writer 09-05-2019 | 7:50 AM
Colombo (News 1st) மாணவர்களின் வருகையை கவனத்தில் கொள்ளாது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு, அனைத்து ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தநிலையில், பாடசாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் மாணவர்களின் வருகையில் காணப்படும் குறைபாடு காரணமாக பாடத்திட்டங்களை பூர்த்திசெய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு பாடசாலைக்கு சமூகமளிக்கும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என, கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பாடசாலைகளில் மாணவர்களின் வருகையைக் குறைக்கும் வகையிலான போலிப் பிரசாரங்கள் மேற்கொண்டமை தொடர்பிலும் பதிவாகியுள்ளாதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சு இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.