உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரைக் காண 90 இலட்சம் ரூபா செலவு?

by Staff Writer 09-05-2019 | 9:46 PM
Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் போட்டிகளைக் காண்பதற்காக சுமார் 90 இலட்சம் ரூபாவை செலவிட்டு நுழைவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்ய இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தயாராகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அணி பங்குபற்றும் 9 போட்டிகள் உட்பட 12 போட்டிகளுக்கு ஒரு போட்டிக்கு 30 நுழைவுச்சீட்டுகள் வீதம் கொள்வனவு செய்வதற்கு இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் இதற்கு முன்னர் நிறைவேற்றுக்குழுவில் தீர்மானித்திருந்தனர். அந்த ஒரு நுழைவுச்சீட்டு 55 முதல் 295 ஸ்டெர்லிங் பவுன்ட்களாகும். ஜூலை 6 ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியின் ஒரு நுழைவுச்சீட்டு 95 பவுன்ட்கள் என தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் பின்னர் அது கோளாறு காரணமாக ஏற்பட்ட தவறு என தெரிவிக்கப்பட்டு, ஒரு நுழைவுசீட்டின் விலை 195 பவுன்ட்கள் என அறிவிக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக்குழுவின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு நுழைவுச்சீட்டின் விலை இலங்கை மதிப்பில் 44,500 ரூபாவாகும். அந்தப் போட்டிக்காக மாத்திரம் மேலதிகமாக இலங்கை மதிப்பில் 6 இலட்சத்து 84 ஆயிரம் ரூபா செலவிடப்படவுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவின் தகவல்கள் மற்றும் ஏனைய இரகசிய தகவல்கள் ஊடகங்களுக்கு தெரியவருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தமது தவறுகளையும், தேவையற்ற செயற்பாடுகளையும் மறைக்க முயலாமல், அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பதே அவசியம்.