ஈரானின் உலோக ஏற்றுமதி மீது அமெரிக்கா தடை

ஈரானின் உலோக ஏற்றுமதி மீது அமெரிக்கா தடை

by Staff Writer 09-05-2019 | 1:48 PM
Colombo (News 1st) ஈரானின் உலோக ஏற்றுமதி மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதற்கான நிர்வாக உத்தரவில் கையொப்பமிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானிய தலைவர்களை சந்தித்துப் பேசி ஒப்பந்தம் ஒன்றுக்கு வருவதற்குத் தாம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். எண்ணெய்க்கு அடுத்ததாக, ஈரானின் இரண்டாவது பிரதான ஏற்றுமதிப் பொருளாக உலோகங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு சர்வதேச அணு ஒப்பந்தத்தின் சில உடன்படிக்கைகளிலிருந்து விலகிக்கொள்வதாக ஈரான் நேற்றைய தினம் அறிவித்திருந்தது. தமது நாட்டிடமுள்ள செறிவூட்டப்பட்ட மிகுதியான யுரேனியத்தை விற்பனை செய்வதற்காகவே குறித்த உடன்படிக்கைகளிலிருந்து விலகுவதாகவும் ஈரான் தெரிவித்திருந்தது. ஈரானின் குறித்த நகர்வுக்குப் பதிலடியான அமெரிக்கா அதன் உலோக ஏற்றுமதி மீது தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகின் 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்குமிடையே 2015 ஆம் ஆண்டில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட குறித்த உடன்படிக்கையிலிருந்து, கடந்த ஆண்டு அமெரிக்கா விலகியிருந்தது. ஈரான் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கு விலக்களிக்கும் வகையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட குறித்த உடன்படிக்கையில் ஏனைய 5 நாடுகளும் தொடந்தும் நீடித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.