மார்க்கத்தைக் கற்பிக்க வந்தவர்கள் தொடர்பில் தகவல்

இஸ்லாம் மார்க்கத்தைக் கற்பிப்பதற்காக வந்த 160 பேர் இன்னும் நாட்டில் தங்கியுள்ளதாக தகவல்

by Staff Writer 09-05-2019 | 7:03 AM
Colombo (News 1st) இஸ்லாமிய மார்க்கத்தைக் கற்பிப்பதற்காக நாட்டிற்கு வருகைதந்த 160 முஸ்லிம் இனத்தவர்கள், நாட்டில் தங்கியுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து இவர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக, திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக இவர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக வீசாவில் குறிப்பிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அரச புலனாய்வுப்பிரிவு மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு ஆகியவற்றின் பரிந்துரைக்கு அமைய குறித்த 160 பேருக்கும் வீசா வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. அவர்களுக்கான வீசா காலம் முடிவடைந்ததன் பின்னர், நாட்டில் தங்கியிருக்க வேண்டுமாயின் அது குறித்து விடயத்திற்கு பொறுப்பான அமைச்சு மற்றும் புலனாய்வுப்பிரிவிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்லாமிய மார்க்கத்தை கற்பிப்பதற்காக நாட்டிற்கு வருகைதந்தவர்களில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் குறித்து புலனாய்வுப்பிரிவிற்கு தகவல்கள் கிடைத்ததுடன் வீசா காலம் நிறைவடைவதற்கு முன்னர் அவர்கள் நாட்டிற்கு திருப்பியனுப்பட்டதாகவும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.