சில அமைச்சர்கள் எவ்வாறு செல்வந்தர்களானார்கள் என அரசாங்கம் விசாரிக்க வேண்டும்: கொழும்பு பேராயர் வலியுறுத்தல்

சில அமைச்சர்கள் எவ்வாறு செல்வந்தர்களானார்கள் என அரசாங்கம் விசாரிக்க வேண்டும்: கொழும்பு பேராயர் வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

09 May, 2019 | 7:53 pm

Colombo (News 1st) நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் தௌிவூட்டுவதற்கு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் சம்மேளனம் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த விசேட ஊடக சந்திப்பு முற்பகல் 11 மணிக்கு நடைபெறவிருந்த போதிலும், ஒரு மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் தாமதமேற்பட்டது.

ஆயர்களை சந்திப்பதற்காக திடீரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தந்தமையே இதற்கு காரணமாகும்.

சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து பிற்பகல் 12.30 அளவில் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் சம்மேளனத்தின் விசேட ஊடக சந்திப்பு ஆரம்பமானது.

இதன்போது, பாதுகாப்பு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள உத்தரவுகளுக்கு அமைய தாம் நடவடிக்கை எடுப்பதாக கொழும்பு பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார்.

கத்தோலிக்க தனியார் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கவில்லை எனவும் நிலைமையைப் பொருத்தே தீர்மானிக்கப்படும் எனவும் பேராயர் தெரிவித்தார்.

அமைச்சர் ஒருவர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அப்பதவிக்கு நியமிக்கப்படும் முன்னர் அவருடைய பொருளாதார பின்புலத்தை ஆராய வேண்டும். அவருடைய பொருளாதாரப் பின்புலம் எவரும் எதிர்பாராத வகையில் அதிகரித்திருந்தால் தேசிய மட்டத்தில் அது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே எனது நம்பிக்கையாகும். அந்த பணம் எவ்வாறு அவர்களுக்கு கிடைத்தது? சில அமைச்சர்கள் எவ்வாறு செல்வந்தர்களாக மாறினார்கள் என்பது தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்

என கொழும்பு பேராயர், பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்