ரயில்களை சோதனையிடுவதற்கு மோப்பநாய்களை ஈடுபடுத்தல்

ரயில்களை சோதனையிடுவதற்கு மோப்பநாய்களை ஈடுபடுத்த தீர்மானம்

by Staff Writer 08-05-2019 | 7:41 AM
Colombo (News 1st) ரயில் பயணிகளின் பயணப்பொதிகளில் வெடிபொருட்கள் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் சோதனையிடுவதற்கு பயிற்சியளிக்கப்பட்ட மோப்பநாய்களை ஈடுபடுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. ரயில் நிலையங்களின் நுழைவாயிலில் ஏற்படும் தேவையற்ற சன நெருக்கடியைத் தவிர்ப்பதற்கும் பயணப்பொதிகளை விரைவில் சோதனையிடுவதற்கும் இதனூடாக எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகளுக்காக விமானப்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒத்துழைப்பை கோரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக, சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் ரயில் நிலையங்களில் கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். தூர ரயில் சேவைகளிலும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளூடாக திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் குழு ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.