முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை

by Staff Writer 08-05-2019 | 1:49 PM
Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை எதிர்வரும் 21 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் அறிந்திருந்தும் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு குறித்து இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தமது பிள்ளைகள் இருவரை இழந்த தந்தையான வௌ்ளவத்தையைச் சேர்ந்த சமன் நந்தன சிறிமான்னவினால் குறித்த அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பிலான தகவல்களை அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தி தண்டனை வழங்குமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இதனிடையே, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் சார்பில் தாம் நீதிமன்றில் ஆஜராகப்போவதில்லை என, சட்டமா அதிபர் திணைக்களம் இன்று (8ஆம் திகதி) நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.