மட்டக்களப்பு பல்கலைக்கழகம் உயர் கல்வி அமைச்சின் சட்டங்களின் கீழ் கொண்டுவரப்படும்: ஜனாதிபதி உறுதி

by Staff Writer 08-05-2019 | 8:30 PM
Colombo (News 1st) கடந்த 26 ஆம் திகதி குண்டுவெடிப்பு இடம்பெற்ற கல்முனை, சாய்ந்தமருது பகுதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விஜயம் செய்திருந்தார். இதன்போது, கிழக்கு மாகாண அரச அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி, மக்களிடையே அச்சம், சந்தேகமற்ற நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை கட்டியெழுப்புவதற்கு அரச அதிகாரிகள் தலையீடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். சாய்ந்தமருது பிரதேசத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது. ஜனாதிபதி இளைஞர், யுவதிகளுடன் நட்பு ரீதியிலான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி தெரிவித்ததாவது,
போதைப்பொருள் வர்த்தகத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையில் தொடர்பிருக்கின்றது. பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என நான் கூறியிருந்தேன். நாங்கள் கைது செய்தவர்களுள் வௌிநாட்டு போதைப்பொருள் வர்த்தகர்களும் அதிகளவானர்கள் உள்ளனர். அதன் காரணமாக போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கும் இந்த பயங்கரவாத செயற்பாட்டிற்கும் இடையில் தொடர்பு இருக்கின்றதா என்ற சந்தேகம் என்னிடத்திலுள்ளது. எந்தளவு சாவலல்கள், இடையூறுகள் வந்தாலும் போதைப்பொருள் ஒழிப்பினை வலுப்படுத்துவோம்
என ஜனாதிபதி குறிப்பிட்டார். மேலும், இதன்போது Batticaloa Campus தொடர்பிலும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்தார்.
ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்துள்ள பல்கலைக்கழகம் தொடர்பில் நான் விசேடமாகக் கூறவேண்டும். இது தொடர்பில் பாரிய விமர்சனங்கள் உள்ளதை ஊடகங்களூடாக அறிந்தேன். இது தொடர்பில் கல்வி அமைச்சு, உயர் கல்வி அமைச்சு அதேபோல் தனியார் பல்கலைக்கழக சட்ட விதிமுறைகளின் கீழ் நடத்திச் செல்வதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்போம். இந்த பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் பாடங்கள் என்ன, உயர் கல்வி பாடத்திட்டங்கள் என்ன என்பது தொடர்பில் தீர்மானங்கள் எடுத்ததும் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் இல்லாது போய்விடும்.