11 ஆசிரியர்களுக்கு தற்காலிக இடமாற்றம்

அவிசாவளை - புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தின் 11 ஆசிரியர்களுக்கு தற்காலிக இடமாற்றம்

by Staff Writer 08-05-2019 | 10:31 PM
Colombo (News 1st) அவிசாவளை - புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தின் 11 ஆசிரியர்களுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார். பாடசாலையில் நேற்று (07) இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் சிலரின் பைகளை சோதனைக்கு உட்படுத்துவதற்கு மாணவர்களின் பெற்றோர் சிலர் முற்பட்டுள்ளனர். இதன்போது, ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கல்வியமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர். 11 ஆசிரியர்களுக்கும் கொழும்பிலுள்ள பாடசாலைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டதாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார். புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தில் 806 மாணவர்கள் கல்வி பயில்வதுடன், 57 ஆசிரியர்கள் கடமையாற்ற வேண்டிய நிலையில், 40 ஆசிரியர்களுடனேயே பாடசாலை இயங்கி வந்தது. இந்த நிலையில், 11 ஆசிரியர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமைக்கு பெற்றோர் இன்று தமது எதிர்ப்பை வௌிப்படுத்தினர். ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறையுடன் பாடசாலை இயங்கி வந்த நிலையில், மேலும் 11 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் என பெற்றோர் தெரிவித்தனர். புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்திற்கு இன்று மாணவர்களின் வருகை குறைவாகக் காணப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.