நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு எதிராக விசமப் பிரசாரங்கள்

நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு எதிராக விசமப் பிரசாரங்கள்

எழுத்தாளர் Staff Writer

08 May, 2019 | 5:29 pm

Colombo (News 1st) சக்தி – நியூஸ்ஃபெஸ்ட்டின் செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் அறிவிப்பாளர்களின் காட்சிகளை உபயோகித்து சில விசமிகளால் சமூக
வலைத்தளங்களில் அண்மைக்காலமாக விசமப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நியூஸ்ஃபெஸ்ட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கிலும் இவ்வகையான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பயங்கரவாத தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டவர்களுடன் குறித்த விசமிகளுக்கு தொடர்பு இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சில அரசியல்வாதிகள் தங்களுடையதும் தமக்கு ஆதரவானதுமான சமூக வலைப்பின்னலை உபயோகித்து இவ்வாறான சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்களா என்ற சந்தேகமும் எழுகின்றது.

இந்த விசமிகள் ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அல்லது அவர்களின் குறிக்கோள்களுக்காக செயற்படுகின்றார்களா என்ற சந்தேகத்தை அவர்கள் வெளியிடும் உண்மைக்குப் புறம்பான, திரிபுபடுத்தப்பட்ட, உறுதிப்படுத்தப்படாத தகவல் பகிர்வு தோற்றுவிக்கின்றது.

இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பயங்கரவாதிகளின் அனுசரணையும் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பும் இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.

நியூஸ்ஃபெஸ்ட் தனது பல வருட அனுபவங்களின் அடிப்படையில், கடந்த காலங்களைப் போலவே சரியானதும் உறுதிப்படுத்தப்பட்டதுமான தகவல்களையே தொடர்ந்து செய்தி அறிக்கையாக வழங்கி வருகின்றது.

நாளாந்தம் நாட்டில் இடம்பெறுகின்ற தேடுதல் வேட்டை, கைதுகள் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிக்கின்ற கருத்துக்கள் சமூகவலைத்தளங்களின் வாயிலாக எமது செய்தி அறிக்கையில் ஒளிபரப்பாகின்றபோது, கடும்போக்கு அடிப்படைவாத சிந்தனை கொண்ட பலர் அதனைப் பொய்ச்செய்தி என சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்கின்றனர்.

எனினும், பொலிஸ் ஊடகப்பேச்சாளரின் கருத்துக்கள் தவறானது என முஸ்லிம் ஆளுநர்களும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை கருத்துத் தெரிவிக்காத நிலையில், சமூகவலைத்தளங்களில் இது தவறானது என கருத்துக்களை பரிமாறுகின்றவர்களின் நடவடிக்கையானது பயங்கரவாதத்துடன் இவர்களுக்கு தொடர்புள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

அடிப்படைவாதிகளின் சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர்களின் இவ்வாறான செயற்பாடு, சக்தி – நியூஸ்ஃபெஸ்ட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ள முஸ்லிம் பெருமக்களை மூளைச்சலவை செய்து, கடும்போக்கின்பால் திசைதிருப்புவதற்கான நடவடிக்கையா எனும் கேள்வியும் எழுகின்றது.

சமூக வலைப்பின்னல் எனும் திரைக்கு பின்னால் மறைந்து இன நல்லிணக்கத்தை சிதைக்கும் முகவரியில்லாத வெட்கக்கேடான பதிவுகளை பகிர்கின்ற விசமிகளை கண்டறிந்து அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.

அடிப்படைவாதத்தை கக்கி சமூக வலைத்தள பதிவுகளுக்கு பின்னால் திரைமறைவில் குளிர்காயும் சூத்திரதாரிகளை வெளிப்படுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை.

எங்கள் மீது பரிபூரண நம்பிக்கை வைத்துள்ள நேயர்கள் எமது செய்திகளை சக்தி TV, சக்தி FM ஊடாகவும் எமது இணையத்தளமான www.newsfirst.lk என்ற எமது இணையத்தளம் மூலமாகவும் அதனுடன் இணைந்த சமூக வலைத்தளங்களிலும் உறுதிப்படுத்தப்பட்ட, நம்பகத்தன்மை வாய்ந்த செய்திகளை அறியலாம் என்பதை சமூகப் பொறுப்புள்ள ஊடக நிறுவனம் என்ற ரீதியில் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மக்களின் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமைக்காகவும் துல்லியமான தகவல்களை வழங்கவும் நாம் தொடர்ந்தும் முன்நிற்போம்.

நியூஸ்ஃபெஸ்ட்டின் ஊடாக மூன்று மொழிகளிலும் சக்தி TV, சிரச TV மற்றும் TV1-இல் ஒளிபரப்பாகின்ற ஒவ்வொரு செய்தி அறிக்கையிடல் தொடர்பான முழுமையான பொறுப்பையும் நாம் ஏற்கின்றோம்.

ஒவ்வொரு செய்திகளையும் அறிக்கையிடுவதற்கு முன்னர் நாம் பல தடவைகள் செய்தி மூலங்களை சரிபார்த்த பின்னரே செய்திகளை அறிக்கையிடுகின்றோம்.

சமூக வலைப்பின்னல்களுக்கு பின்னால் மறைந்து கொண்டு சக்தி – நியூஸ்ஃபெஸ்ட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து கடும்போக்குவாத சிந்தனைக்கு ஒத்து ஊதுகின்ற விசமிகளை நாம் நிச்சயம் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவோம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்