ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி

எழுத்தாளர் Staff Writer

08 May, 2019 | 9:00 am

Colombo (News 1st) ஐ.பி.எல். அரங்கில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது தடவையாகவும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

சென்சை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய முதல் ப்ளே ஓப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு ஆட்டமாக இந்தப்போட்டி நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்து தடுமாற்றத்துக்குள்ளானது.

முதல் 4 விக்கெட்களும் 65 ஓட்டங்ளுக்கு வீழ்த்தப்பட்டன.

அம்பாத்தி ராயுடு 42 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள மஹேந்திர சிங் தோனி 37 ஓட்டங்களை பெற்றார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்களை பெற்றது.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியும் ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்து சிரமத்துக்குள்ளானது.

சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஜோடி மூன்றாவது விக்கெட்டில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியீட்டும் நம்பிக்கையை உருவாக்கியது.

இஷான் கிஷான் 28 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள பொறுமையாக துடுப்பெடுத்தாடிய சூர்யகுமார் யாதவ் 10 பவுன்டரிகளுடன் 54 பந்துகளில் 71 ஓட்டங்களை பெற்று மும்பை அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரையில் 3 தடவைகள் சாம்பியனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான முன்னோடியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முக்கோண ஒருநாள் தொடரில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி சாய் ஹோப்பின் சதத்துடன் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 261 ஓட்டங்களை பெற்றது.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஷ் 45 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

இந்தப் போட்டியானது பாகிஸ்தான் நடுவர் அலிம் டாரின் 200 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியாக பதிவானது.

இந்த முக்கோண ஒருநாள் தொடரில் பங்களாதேஷ், மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்