Batticaloa Campus -ஐ அரசு பொறுப்பேற்க வேண்டும்

Batticaloa Campus -ஐ அரசு பொறுப்பேற்க வேண்டும்: காவிந்த ஜயவர்தன தனிநபர் பிரேரணை சமர்ப்பிப்பு

by Staff Writer 07-05-2019 | 6:57 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - புனானை பகுதியில் நிர்மாணிக்கப்படும் Batticaloa Campus -ஐ அரசு பொறுப்பேற்க வேண்டும் என கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரிடம் இந்த தனிநபர் பிரேரணை இன்று கையளிக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள வர்க்க வேறுபாடு, மத வேறுபாடு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஆகியவற்றுடன் ஷரியா சட்டம் நாட்டு மக்களிடையே தற்போது பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஷரியா சட்டத்தைக் கற்பிக்கும் பல்கலைக்கழகமானது நாட்டின் அமைதியை சீர்குலைக்கக்கூடும் என காவிந்த ஜயவர்தனவின் தனிநபர் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இன்று பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அவர்களின் செயற்பாடுகளுக்கு ஒத்தாசைகள் வழங்கியுள்ள யாரேனும் ஒருவர் தொடர்பில் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்படுமாயின், அவ்வாறானவர்களுக்கு மரண தண்டனையை வழங்க வேண்டும் என அவரின் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல , சம்பந்தப்பட்டவர்களின் அனைத்து சொத்துக்களையும் அரசுடைமையாக்க வேண்டும் எனவும் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.