ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவரும் விடுதலை

ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவரும் 500 நாட்களின் பின்னர் விடுதலை

by Staff Writer 07-05-2019 | 12:18 PM
Colombo (News 1st) மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ரோய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவரும் 500 நாட்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வா லோன் (Wa Lone) மற்றும் கியாவ் சூவோ (Kyaw Soe Oo) ஆகிய இருவரும் அந்நாட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரச இரகசியங்களை பாதுகாக்கும் சட்டத்தை மீறி செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்து அவர்களுக்கு கடந்த செப்டெம்பர் மாதம் 7 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குறித்த இரண்டு ஊடகவியலாளர்களும் யோங்கோனின் புறநகர்ப் பகுதியில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். மியன்மாரில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கேள்வியெழுப்பியமைக்காக இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் பார்ப்பதற்கு மிகவும் சந்தோசத்துடனும் ஆவலுடன் இருப்பதாக, விடுதலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் வா லோன், ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், மியன்மார் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் வா லோன் மற்றும் கியாவ் சூவோவுடன் சேர்த்து ஆயிரக்கணக்கான கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.