பயங்கரவாதிகளுக்கு பயிற்சி: முகாம் சுற்றிவளைப்பு

பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டிருந்த மற்றொரு முகாம் சுற்றிவளைப்பு

by Staff Writer 07-05-2019 | 1:34 PM
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகளும் சுற்றிவளைப்புகளும் இடம்பெற்று வருகின்றன. பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்போது வெடிபொருட்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்படுவதாக பாதுகாப்புத் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். இந்தநிலையில், தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த பயிற்சி முகாம் ஒன்று பொலன்னறுவை - வெலிகந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த பயிற்சி முகாம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பின் தலைவர் எனக் கூறப்படும் மொஹமட் சஹ்ரானின் சாரதியால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வவுனியா அலகல்ல அளுத்கம பகுதியிலிருந்து சொப்பர் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் 85 குண்டுகளை பொலிஸார் மீட்டுள்ளனர். வவுனியா - ஈரப்பெரியகுளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேநேரம், அநுராதபுரம் - கலாவெவ பகுதியில் மெற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது 243 ஜெலனயிட் குச்சிகளும் வெடி மருந்துகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அநுராதபுரம் சேனபுர பகுதியில் பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது இராணுவ சீருடைகள் இரண்டும் இராணுவ சீருடைகளை ஒத்த 54 உடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இதேவேளை, மீரிகம பாதுராகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது வடிகாண் ஒன்றிலிருந்து இரண்டு கைக்குண்டுகளும் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்