உலகக்கிண்ண கிரிக்கெட்: இலங்கைக் குழாம் பயணமாகியது

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்: இலங்கைக் குழாம் பயணமாகியது

by Staff Writer 07-05-2019 | 1:12 PM
Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாம் இன்று (7ஆம் திகதி) காலை இங்கிலாந்துக்கு பயணமானது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆரம்பமாகவுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு முன்னர் இலங்கை அணி ஸ்கொட்லாந்துடன் ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளதுடன் பயிற்சிப் பாசறைகளிலும் கலந்துகொள்ளவுள்ளது. உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாத்தில் இடம்பெற்ற வீரர்கள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக இங்கிலாந்துக்கு பயணமாகியுள்ளனர். இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் மற்றும் இலங்கை அணி வீரர்களின் குடும்பத்தாரும் இதில் பங்கேற்றிருந்தனர். ஸ்கொட்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு முன்னர் இலங்கை அணி இரண்டு பயிற்சிப் பாசறைகளில் பங்கேற்கின்றது. அந்த பயிற்சி பாசறையானது எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு முன்னர் ஒரு வாரத்துக்கு அமைவுள்ளது. அத்துடன், அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடன் இலங்கை அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கவுள்ளது. அந்தப்போட்டிகள் எதிர்வரும் 24 மற்றும் 31 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. உலகக்கிண்ணத்தில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்த்தாடவுள்ளது. அந்தப் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி கார்டிப்பில் நடைபெறவுள்ளது.