வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலை ஊழியர்களில் 9 பேர் விடுவிப்பு

by Staff Writer 06-05-2019 | 9:12 PM
Colombo (News 1st) கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்களுக்காக குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெல்லம்பிட்டி செப்புத்தொழிற்சாலையில் கைது செய்யப்பட்ட, 10 ஊழியர்களில் 9 பேரை பிணையில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், வழக்கின் பத்தாவது சந்தேகநபரான கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லா என்பவர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான மொஹமட் லாபீர், ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தியவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவந்துள்ளமை தொலைபேசி அழைப்புக்களூடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். குறித்த 10 சந்தேகநபர்களும் இரண்டு தொடக்கம் 8 சிம் அட்டைகளைப் பயன்படுத்தியுள்ளனர். 30,000 ரூபா மாதாந்த சம்பளத்திற்கு அவர்கள் பணியாற்றியுள்ளதாக அவர்கள் தெரிவித்தாலும், பெரும்பாலான நேரங்களில் தொழிற்சாலைக்கு வௌியில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நடமாடி தகவல்களை சேகரித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம், 30,000 ரூபாவிற்கு அதிக தொகையை மாதாந்த வாடகையாக செலுத்தி வீடொன்று பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது. இவர்களுக்கு பிணை வழங்க வேண்டாம் என பொலிஸார் மன்றில் கோரிய நிலையில், இவர்கள் தொடர்பில் எந்த சட்டத்திற்கமைய விசாரணை நடத்தப்படுகின்றது என கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே பொலிஸாரிடம் வினவியுள்ளார். இது தொடர்பில் உரிய பதிலளிப்பதற்கு பொலிஸார் தவறியமையால், 9 சந்தேகநபர்களையும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், சந்தேகநபர்கள் வௌிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 54 சந்தேகநபர்கள் குற்றத் தடுப்புப்பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் பெண்களாவர். இதனைத்தவிர கைது செய்யப்பட்ட மேலும் 19 பேர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் பெண்களாவர். கைது செய்யப்பட்டுள்ள 73 பெண் சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.