by Staff Writer 06-05-2019 | 9:58 PM
Colombo (News 1st) உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாத்தை வாழ்த்தி வழியனுப்பும் வைபவம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைமையகத்தில் இன்று (6ஆம் திகதி) இடம்பெற்றுள்ளது.
சர்வமத வழிபாடுகளின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கை அணி சவால்களை முறியடித்து சாதிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நெருக்கடியான சூழல்கள் உருவாகும் ஒவ்வொரு தருணங்களிலும் இலங்கையர்கள் ஒன்றிணைந்து சவால்களை முறியடித்த வரலாறு உண்டென்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கு இலங்கை அணி பயணமாகும் போதும் நாட்டில் இதுபோன்றதொரு அசாதாரண சூழ்நிலை நிலவியதுடன் அப்போதும் எம்மவர்கள் தைரியமாக விளையாடி முழு உலகின் கவனத்தையும் ஈர்த்து வெற்றியீட்டியதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, அணி என்ற ரீதியில் ஒற்றுமையுடன் இருப்பதாகவும் நிச்சயமாக ரசிகர்களின் ஆதரவுடன் இலங்கையால் சாதிக்க முடியும் எனவும் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
லசித் மாலிங்க ஐ.பி.எல். போட்டிகளின் பின்னர் இலங்கை அணியுடன் இணைந்துகொள்வார் எனவும் அவருடைய பங்களிப்பு அணிக்கு சிறப்பாக கிடைக்கும் என நம்புவதாகவும் திமுத் கருணாரத்ன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி தனது முதல் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.