லிபிய தாக்குதலுக்கு ஐ.எஸ். உரிமை கோரியது

லிபிய தேசியபடை முகாம் மீது தாக்குதல்: ஐ.எஸ். உரிமை கோரியது

by Staff Writer 05-05-2019 | 1:01 PM
Colombo (News 1st) லிபிய தேசிய படைகளின் பயிற்சி முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஐ.எஸ். உரிமை கோரியுள்ளது. லிபியாவின் தென் பிராந்திய நகரான சபாஃவில் (Sabha) அமைந்துள்ள, ஜெனரல் ஹலீஃபா ஹப்தர் (Khalifa Haftar) தலைமை வகிக்கும் லிபிய படைகளின் பயிற்சி நிலையத்தின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாக, வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சபாஃ நகரில் தமது அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 16 பேர் உயிரிழந்து அல்லது காயமடைந்ததாகவும் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளை விடுவித்துள்ளதாகவும் ஐ.எஸ். அமைப்பு இணையத்தில் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராணுவத் தளத்துக்குள் இருந்த சிறைச்சாலை தகர்க்கப்பட்டதை இராணுவத் தரப்பினர், சர்வதேச ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ள போதிலும் மேலதிக தகவல்கள் எதனையும் வௌியிடவில்லை. ஜெனரல் ஹப்தர் தலைமை வகிக்கும் கிழக்கு லிபியப் படையினர் கடந்த ஜனவரி மாதத்தில் லிபியாவின் எண்ணெய் வளம் நிறைந்த தென் பிராந்தியத்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். குறித்த படைகள் தற்போது வட மேற்கு பிராந்தியத்தை இலக்கு வைத்துள்ளதுடன், லிபிய தலைநகர் திரிபோலியைக் கைப்பற்றுவதற்காக அவர்கள் அங்கிருந்தே மோதல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.