மாகந்துரே மதுஷ் மேலதிக விசாரணைக்காக CID வசம்

மாகந்துரே மதுஷ் மேலதிக விசாரணைகளுக்காக CID வசம்

by Fazlullah Mubarak 05-05-2019 | 9:19 PM

துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாளக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இன்று காலை 5 மணியளவில் நாட்டை வந்தடைந்த மாகந்துரே மதுஷ், விமான நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கடத்தல் மாத்திரமன்றி, தென் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டேனி ஹித்தெடியவின் கொலை உள்ளிட்ட கொலைக்குற்றச்சாட்டுக்களும் மாகந்துரே மதுஷ் மீது சுமத்தப்பட்டுள்ளன. கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் LTTE அமைப்புடன் தொடர்புகளைப் பேணியதாகவும் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனைத்தவிர, களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பாதாளக் குழு முக்கியஸ்தர் சமயங் உள்ளிட்ட ஏழு பேரை கொலை செய்த குற்றச்சாட்டும் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், இலங்கையிலிருந்து வெளியேறி துபாயில் வாழ்ந்துவந்த மதுஷ் உள்ளிட்டோர், துபாயிலுள்ள ஹோட்டலொன்றில் வைத்து கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். துபாயிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் இடம்பெற்ற மதுஷின் பிள்ளையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்போது மதுஷூடன் கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் இதுவரை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களிடையே மாகந்துரே மதுஷின் நண்பரான, பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கஞ்சிப்பானை இம்ரானை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் தடுத்துவைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சிலர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். துபாயில் கைது செய்யப்பட்ட மதுஷ், அங்கு வழக்கொன்றை தாக்கல் செய்து தம்மை நாடு கடத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்தார். உயிர் அச்சுறுத்தல் உள்ளிட்ட சில விடயங்களைக் குறிப்பிட்டு மதுஷ் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.