திம்புலாகலயில் கடும் காற்று: 40 வீடுகள் சேதம்

திம்புலாகலயில் கடும் காற்று: 40 வீடுகள் சேதம்

by Staff Writer 05-05-2019 | 12:43 PM
Colombo (News 1st) பொலன்னறுவை - திம்புலாகல பகுதியை ஊடறுத்து வீசிய காற்றினால் 40 க்கும் அதிக வீடுகள் சேதமடைந்துள்ளன. திம்புலாகல, தம்மிந்த, அருணபுர உள்ளிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக, பொலன்னறுவை மாவட்ட உதவி பணிப்பாளர் உபுல் நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று மாலை 5.30 மணியளவில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது. குறித்த பகுதிகளிலுள்ள வீடுகளின் மீதும், வீதிகளிலும் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட உதவி பணிப்பாளர் கூறியுள்ளார். இராணுவத்தினர், சிவில் பாதுகாப்பு படையினர் பொலிஸார் மற்றும் இடர்முகாமைத்துவ நிலைய அதிகாரிகளும் இணைந்து மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதாகவும் பொலன்னறுவை மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நிலவும் பலத்த காற்றுடனான மழையுடன் கூடிய வானிலை சற்று குறைவடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் கூறியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.