தேர்தலைப் பிற்போட முடியாது - ஜனாதிபதி

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் ஸ்திரத்தன்மை - ஜனாதிபதி உறுதி

by Staff Writer 05-05-2019 | 1:10 PM
Colombo (News 1st) இந்த வருடத்தின் இறுதியில் நடாத்தப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னர், பாதுகாப்புப் பிரிவினர், பயங்கரவாதிகளை ஒடுக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளதை தாம் நம்புவதாகவும் அதேநேரம், தேர்தலைப் பிற்போட முடியாது எனவும் ரோய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி கூறியுள்ளார். பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சுமார் 30 பேர் சுதந்திரமாக நடமாடுவாதாகவும் எனினும் அவர்கள் தற்கொலைதாரிகளா என்பது தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் இதன்போது ஜனாபதி தெரிவித்துள்ளார். இந்தக் குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்று அறிக்கை வௌியிட்டுதால், அந்த தாக்குதல்களின் பின்னணியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளதை தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தத் தாக்குதல்களானது, இலங்கை பிரச்சினை அல்லவென தெரிவித்துள்ள ஜனாதிபதி, இது சர்வதேச பயங்கரவாத செயற்பாடாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, ஜேர்மனி, மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரோய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.