அக்‌ஷய் குமார் தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்: அக்‌ஷய் குமார் விளக்கம்

by Bella Dalima 04-05-2019 | 5:35 PM
இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அக்‌ஷய் குமார், தேர்தலில் வாக்களிக்காதது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், அவர் விளக்கம் அளித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் இந்தி நடிகர், நடிகைகள் வாக்களித்தனர். அப்போது நடிகர் அக்‌‌ஷய் குமாரின் மனைவி வாக்களிக்கச் சென்றிருந்தார். ஆனால், அக்‌‌ஷய் குமார் செல்லவில்லை என்பது சர்ச்சைக்குள்ளானது. மும்பையில் நடைபெற்ற பிளாங் திரைப்பட திரையிடலின் போது, அக்‌‌ஷய் குமாரிடம் பத்திரிகையாளர் ஒருவர் இது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதில் அளிக்காமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றார். கடந்த சில ஆண்டுகளாகவே அக்‌‌ஷய் குமார் சமூக கருத்துக்களைத் தாங்கிய படங்களில் நடித்து வருகிறார். வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களிலும் நடித்துள்ளார். எனவே ‘வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு விளம்பரங்களில் நடித்த அக்‌‌ஷய் இவ்வாறு செய்வதா?’ என்று கேள்விகள் எழுந்தன. மேலும், அக்‌‌ஷய் குமாரிடமும் கனடா நாட்டு குடியுரிமை இருப்பதை இந்த சம்பவத்தோடு முடிச்சு போட்டு செய்திகள் பரவின. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர்,
என் குடியுரிமை குறித்து தேவையில்லாத ஆர்வமும், எதிர்கருத்துகளும் ஏன் பரப்பப்படுகின்றன என்று எனக்குப் புரியவில்லை. நான் கனடா குடியுரிமை வைத்திருப்பது குறித்து ஒருபோதும் மறைத்ததில்லை. யாரிடமும் மறுத்ததும் இல்லை. இது எந்த அளவுக்கு உண்மையோ, நான் கடந்த 7 ஆண்டுகளாக கனடாவிற்கு செல்லவில்லை என்பதும் உண்மைதான். நான் இந்தியாவில் வேலை செய்கிறேன். அனைத்து வரிகளையும் இந்தியாவிலேயே செலுத்துகிறேன். இத்தனை ஆண்டுகளில் நான் தேசத்தின் மீதான காதலை யாரிடமும் நிரூபிக்கவேண்டிய தேவை இருந்ததில்லை. என் குடியுரிமை குறித்து தொடர்ந்து தேவையில்லாத சர்ச்சைகளை நான் விரும்பவில்லை. தனிப்பட்ட, சட்டப்பூர்வமான, அரசியலற்ற என் குடியுரிமை யாருக்கும் எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை. இந்தியாவை வலிமையாக்க சிறிய அளவிலான எனது பங்களிப்பைத் தொடர்ந்து செலுத்துவேன்.
என கூறியுள்ளார்.