நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் சுற்றிவளைப்பு: வெலிமடையில் 13 சந்தேகநபர்கள் கைது

நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் சுற்றிவளைப்பு: வெலிமடையில் 13 சந்தேகநபர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

04 May, 2019 | 3:44 pm

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் பாதுகாப்பு சுற்றிவளைப்புகளும் சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கமைய, வெலிமடை குருத்தலாவை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை வெலிமடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னார் – சாந்திபுரம் பகுதியில் 12 கிலோகிராம் C4 ரக வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 6 நேரக்கணிப்பான்களும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்தது.

வெடிபொருட்களையும் நேரக்கணிப்பான்களையும் அழிக்க கிளிநொச்சி குண்டு செயழிலக்கச் செய்யும் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை குறிப்பிட்டது.

இதேவேளை, சாய்ந்தமருதில் வழிப்பாட்டுத் தலமொன்றின் தகவல்களைத் திரட்டிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பங்கரவாதத் தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹ்ரானின் காணொளிகள் அடங்கிய கையடக்கத் தொலைபேசியுடன் மதத் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதியத்தலாவ பகுதியில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த மதத் தலைவரின் கையடக்கத் தொலைபேசியில் சஹ்ரானின் காணொளிகள் காணப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

பதியத்தலாவ பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு பயணித்துக்கொண்டிருந்த போது நேற்றிரவு மதத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கம்பளை மற்றும் மாத்தளை நகர்களை அண்மித்த பகுதிகளிலும் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத அமைப்பினரின் உரைகள் அடங்கிய இறுவட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் அங்கும்புற – கல்ஹின்ன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடனும் பயங்கரவாதிகளுடனும் தொடர்புடையவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, குருநாகல் தொரட்டியாவ பகுதியில் 24 வெற்றுத்தோட்டக்கள், 2 வாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கண்டி – கட்டுகஸ்தோட்ட, ராகுல வித்தியாலய விளையாட்டரங்கிற்கு அருகில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து துப்பாக்கிகளும், வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்