மும்பை இன்டியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவு

மும்பை இன்டியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவு

by Bella Dalima 03-05-2019 | 4:48 PM
IPL இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மூன்றாவது அணியாக மும்பை இன்டியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவானது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலை அடைந்ததுடன், சுப்பர் ஓவரில் மும்பை இன்டியன்ஸ் அணி வெற்றியீட்டியது. மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான குயின்டன் டி கொக் ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களைப் பெற்றார். மும்பை இன்டியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் கலீல் அஹமட் 3 விக்கெட்களை வீழ்த்தினார். பதிலளித்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் மனிஷ் பாண்டே 71 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்தார். மொஹமட் நபி 31 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, மும்பை இன்டியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் சமநிலை அடைந்தது. இதன்படி, வெற்றியை தீர்மானிக்க சுப்பர் ஓவர் வீசப்பட்டதுடன் அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 8 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடிய மும்பை இன்டியன்ஸ் அணி 4 பந்துகளில் 9 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இதற்கமைய, ப்ளே-ஆஃப் சுற்றுக்கு சென்னை, டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளின் வரிசையில் மூன்றாவதாக மும்பை இன்டியன்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது. ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற இன்னும் ஓர் அணிக்கு வாய்ப்புள்ளதுடன், அதற்கான போட்டியில் கிங்ஸ் ​லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் உள்ளன.