by Staff Writer 03-05-2019 | 3:32 PM
Colombo (News 1st) ஜா - எல , ஏக்கல பிரதேசத்தில் இரும்பு உற்பத்தி தொழிற்சாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட ரவைகள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக தொழிற்சாலையின் பொது முகாமையாளர் மற்றும் முகாமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறினர்.
நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்றிரவு சோதனை முன்னெடுக்கப்பட்டது.
சோதனையின் போது, 409 தோட்டாக்களும் 584 வெற்றுத்தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்றிரவு மஹரகம பிரதேசத்திலுள்ள வீடொன்று சோதனையிடப்பட்டது.
நேற்றிரவு 10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் போது இராணுவத்தினருடன் மஹரகம பொலிஸாரும் இணைந்து கொண்டனர்.
குறித்த வீட்டிலிருந்து இராணுவத்தின் சீருடையை ஒத்த ஆடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வீட்டிலிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மஹரகம பிரதேசத்தில் ஆடை விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பலப்பிட்டிய பகுதியில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து கத்தி மற்றும் பிக்குகள் அணியும் ஆடைகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.