ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் மரபணு பரிசோதனைக்கு நீதிமன்றம் அனுமதி

by Staff Writer 02-05-2019 | 8:37 PM
Colombo (News 1st) கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவரை அடையாளம் காண்பதற்கு அவருடைய மகளின் குருதி மாதிரியை பெற்று DNA பரிசோதனை அறிக்கையை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் ரங்க திசாநாயக்க, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கடந்த 21 ஆம் திகதி கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் அஜாம் மொஹமட் முபாரக் என்பவருடைய மகளின் இரத்த மாதிரிகளைப் பெற்றுக்கொள்வதற்கும், மரபணு சோதனை அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்கும் அனுமதி கோரி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஆராய்ந்து நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் இப்ராஹிம் இக்பால் அஹமட் என்பவருடைய தாயின் குருதி மாதிரியை பெற்று DNA அறிக்கையைத் தயாரிக்குமாறும் நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்