துருக்கி பயங்கரவாதிகள் 50 பேர் இலங்கையில் உள்ளதாக தகவல் வழங்கியதாக வசந்த சேனாநாயக்க தெரிவிப்பு 

by Bella Dalima 02-05-2019 | 9:57 PM
Colombo (News 1st) துருக்கியின் பயங்கரவாத அமைப்பான FETO-வின் 50 உறுப்பினர்கள் 2015 ஆம் ஆண்டில் இருந்து இலங்கைக்குள் உள்ளமை தொடர்பில் துருக்கி தூதரகம் நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்குள் 16 பேர் தொடர்பில் பொலிஸ் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் துருக்கியில் பயிற்சி பெற்றுள்ளனர். குண்டுதாரியான மொஹமட் சஹ்ரானை தாக்குதலுக்கு தூண்டிய மொஹமட் இமாம் பாகிர் என்ற இமாம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் சிரியா சென்று ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் இருந்த ஒருவர் என கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்கவிடம் வினவியபோது,
என்னிடம் கேள்வி எழுப்புவதற்கு பதிலாக துருக்கி தூதுவரிடமே வினவ வேண்டும். முன்னாள் தூதுவரே தற்போதுமுள்ளார். துருக்கியின் இஸ்லாம் பிரிவினைவாதிகள் 50 பேரின் பட்டியலை 2015 ஆம் ஆண்டு முதல் வழங்கியதாக அவர் கூறுகின்றார். அத்துடன், 10 அமைப்புகளின் பெயர்களை அவர் வழங்கி அவதானமாக இருக்குமாறு அன்று கூறியுள்ளார். இராஜாங்க அமைச்சராக இருந்த போது எனக்கு கிடைத்த தகவல்களை, பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கினேன். எனினும், எப்போதும் எமக்கு ஒரேயொரு பதிலே வழங்கப்படும். இது தொடர்பான இறுதி தீர்மானத்தை நாம் எடுப்போம் என கூறப்பட்டது. பாதுகாப்பு பேரவைக்கு இதனை சமர்ப்பித்து, தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம் என கூறப்பட்டது. எனினும், சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தம் காரணமாக அந்த சந்தர்ப்பத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது என தூதுவர் இறுதியாக பாதுகாப்பு அமைச்சிற்கு சென்ற சந்தர்ப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதனை கூறுவது தகுந்தது அல்ல, பலம்வாய்ந்த மேற்கத்தேய நாடொன்று எம் மீது கோபமடையும். அந்த நாட்டிலிருந்து அழுத்தம் காணப்படுகின்றமையால் இவர்களை தடை செய்ய வேண்டாம் என வௌிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் கூறினார். இது உண்மையா, பொய்யா என எனக்கு தெரியாது. தூதுவர் கூறும் வகையில், பலர் பாடசாலைகளில் இருந்தனர். மதராசாவூடாக பிள்ளைகளை மூளைச்சலவை செய்யும் வகையில் பிரிவினைவாத கருத்துக்களை முன்வைப்பதாக அவர் அன்றே கூறியிருந்தார்.
என பதிலளித்தார். முன்னாள் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கூறும் வகையில், இது தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தடையாக செயற்பட்டுள்ளனர். அவர்கள் யார் என்பது தொடர்பிலான தகவல்களை அம்பலப்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும்.