ஃபானி புயல்: ஆயிரக்கணக்கான மக்கள் வௌியேற்றம்

ஃபானி புயலின் தாக்கம்: இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் வௌியேற்றம்

by Chandrasekaram Chandravadani 02-05-2019 | 1:03 PM
Colombo (News 1st) ஃபானி (Fani) புயல் காரணமாக இந்தியாவின் கிழக்குக் கரையோரக் கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வௌியேற்றப்பட்டுள்ளனர். பலம்மிக்க ஃபானி சூறாவளி ஒடிஷா (Odisha) மாநிலத்தை நோக்கி 200 கிலோமீற்றர் வேகத்துடனான காற்றுடன் நகர்ந்து வருகின்றது. இதேவேளை, இந்தப் புயலானது நாளையதினம் கரையைக் கடக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக, இந்தியாவின் கிழக்குக் கரையோரப்பகுதியில் அமைந்துள்ள இரண்டு பிரதான துறைமுகங்களின் நடவடிக்கைகள் முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேற்றும் நடவடிக்கைளில் ஆயிரக்கணக்கான மீட்புப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, தமிழகம் மற்றும் ஆந்திரபிரதேஷ மாநிலங்களும் புயல் தொடர்பான உயர் எச்சரிக்கையுடன் இருப்பதாக குறித்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, ஃபானி புயல் காரணமாக ஒடிஷா, ஆந்திரபிரதேஷ், மேற்கு வங்கம் மற்றும் கொல்கத்தா ஆகிய மாநிலங்களிலுள்ள 19 மாவட்டங்கள் பாதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கையாக 103 ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், மீனவர்களைக் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, அடுத்த 3 நாட்களுக்கு ஒடிஷாவிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும் என்பதுடன், 8 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்படுவதாகவும் அவர்களுக்காக 900 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மக்களவைத் தேர்தலின் அடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஒடிசாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.