கருத்து மற்றும் ஆலோசனைகளை முன்வைக்குமாறு கோரிக்கை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ்மா அதிபரிடம் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 01-05-2019 | 7:13 AM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவிடம், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் சிலரிடம் வாக்குமூலங்களைப் பதிவுசெய்யவுள்ளதாக அறிக்கை ஒன்றினூடாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இதற்கான தகவல்களை வழங்க விரும்புவோர் எழுத்து மூலமாகவோ அல்லது தொலைநகலின் ஊடாகவோ வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துமூலம் வழங்குவோர், ஜனாதிபதி விசேட விசாரணை செயலகம், தபால் பெட்டி இலக்கம் 2306, கொழும்பு - 01 என்ற முகவரிக்கு உங்களின் கருத்துக்களை அனுப்பிவைக்க முடியும். அத்தோடு, 011 2 100 446 என்ற தொலைநகல் இலக்கத்திற்கும் உங்களின் ஆலோசனைகளை அனுப்பிவைக்க முடியும். உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் விஜித் மலல்கொட, அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்ககோன் ஆகியோர் இந்த மூவரடங்கிய விசாரணை குழுவில் அங்கம் வகிக்கின்றனர். நாட்டின் சில பகுதிகளில் கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து இரு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குறித்த மூவரடங்கிய குழுவினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.