விசேட விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

விசேட விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

எழுத்தாளர் Bella Dalima

01 May, 2019 | 7:40 pm

Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி நியமித்த விசேட விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை தற்போது ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளது.

அது தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்தார்.

இடைக்கால அறிக்கையிலுள்ள விடயங்கள் தொடர்பில் நாளைய தினம் (02) சட்ட மா அதிபருடன் இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுப்பதற்கு பொலிஸ் மா அதிபருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் சந்தர்ப்பம் காணப்பட்டபோதும் அவர்கள் அதனைச் செய்யவில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

LTTE அமைப்புடன் போராட்டத்தை முன்னெடுத்த வகையில், சர்வதேச IS பயங்கரவாத அமைப்புடன் போராட வேண்டிய நிலை இலங்கைக்கு இல்லை எனவும் அது தொடர்பில் மாறுபட்ட விதத்தில் சிந்தித்து, திட்டமிட்டு செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

வெளிநாடுகளில் இருந்து இராணுவத்தை வரவழைக்க முயல்வதாக சிலர் கூச்சலிடுகின்றனர். எந்தவொரு நாட்டில் இருந்தும் இலங்கைக்கு இராணுவத்தை வரவழைக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி உறுதிபடக் கூறினார்.

இலங்கை பாதுகாப்புப் படையினருக்கும் பொலிஸாருக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் பயங்கரவாதிகளை முற்றாக ஒழிப்பதற்கான இயலுமையுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் பலத்துடனும் சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்புடனும் பயங்கரவாதத்தை பூரணமாக ஒழிப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்