ராகுல் இங்கிலாந்து நாட்டவர் என பாஜக முறைப்பாடு

ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டவர்: பாரதிய ஜனதாக் கட்சி முறைப்பாடு

by Bella Dalima 30-04-2019 | 5:47 PM
இந்திய மக்களவைத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப் பதிவு 64 வீதமாக அமைந்துள்ளது. ஒரு சில வன்முறை சம்பவங்களைத் தவிர பெரும்பாலும் நான்காம் கட்ட வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறுகின்ற இந்திய மக்களவைத் தேர்தலின் நான்காம் கட்டத்தின் கீழ் நேற்று (29) 71 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் அதிகப்படியாக 76 வீதமானவர்கள் வாக்களித்துள்ளதாக இந்திய தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது. இதனைத் தவிர, மத்திய பிரதேஷில் 65 வீதத்திற்கும் மேற்பட்டவர்களும் ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேஷ் மாநிலங்களில் 62 வீதமானவர்களும் வாக்களித்துள்ளனர். இந்த நிலையில், ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பில் பாரதிய ஜனதாக் கட்சி முறைப்பாடு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு சொந்தமான நிறுவனம் இங்கிலாந்து அரசுக்கு செலுத்திய கணக்கு அறிக்கைகளில் அவர் இங்கிலாந்து பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சில் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி முறைப்பாடு செய்துள்ளார். குறித்த நிறுவனம் 2003 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ராகுல் காந்தி பணிப்பாளராகவும் செயலாளராகவும் உள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி உத்தரபிரதேஷின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதிகளில் போட்டியிடுகின்ற நிலையில், இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தமது குடியுரிமை தொடர்பில் விளக்கமளிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சினால் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதாக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுப்ரமணிய சுவாமியினால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய ராகுல் காந்திக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவரா என்பது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள நோட்டீஸ் என்பது மக்களின் கவனத்தை திசைதிருப்பும் மோடியின் கட்டுக்கதை என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இன்று ஊடகங்களுக்கு விளக்கமளித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, ராகுல் காந்தி பிறப்பால் இந்தியக் குடிமகன் என்பது உலகறிந்த விடயம் என கூறியுள்ளார்.