கம்பளை வர்த்தகரின் பாதணிக் கடையில் சோதனை: மறைத்து வைக்கப்பட்டிருந்த வன்தட்டுகள் கைப்பற்றப்பட்டன

by Bella Dalima 30-04-2019 | 7:46 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சகோதரர்களான சாதிக் அப்துல் ஹக் மற்றும் சாஹிட் அப்துல் ஹக் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் அண்மையில் நாவலப்பிட்டியில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மறைந்திருந்ததாகக் கூறப்படும், கம்பளை நகரிலுள்ள அவர்களின் மாமாவுக்கு சொந்தமான பாதணிக்கடை பாதுகாப்புத் தரப்பினரால் இன்று காலை மீண்டும் சோதனைக்குட்படுத்தப்பட்டது. இந்த தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி என கூறப்படும் மொஹமட் சஹ்ரானின் உரைகள் அடங்கிய காணொளிகள், அந்த அமைப்பின் ஆவணங்கள் மற்றும் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பான பயிற்சிகள், சிரியாவில் முன்னெடுக்கப்பட்ட இராணுவப் பயிற்சிகள் அடங்கிய காணொளிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த காணொளிகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த வன்தட்டு (HARD DISK) துணிகளால் சுற்றப்பட்டு பாதணிகளைத் தைக்கும் இயந்திரத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதேவேளை, எரியூட்டப்பட்டிருந்த வன்தட்டுகள் சிலவற்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.