எண்மருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட எண்மருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

by Bella Dalima 30-04-2019 | 4:47 PM
Colombo (News 1st) பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் தலைவர் ஜெஃப்ரி அலோசியஸ் உள்ளிட்ட 8 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்த மாதம் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற முறிகள் ஏலத்தின் போது, மத்திய வங்கியூடாக பெற்றுக்கொள்ளப்பட்ட இரகசியத் தரவுகளைப் பயன்படுத்தி மோசடியான முறையில் நிதி சேகரித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகநபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் 1.30 அளவில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, ஏழாவது சந்தேகநபர் மன்றில் ஆஜராகாமையால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், சுமார் 2 மணியளவில் அவர் மன்றில் ஆஜராகியமையால், பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு மீளப்பெறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உரிய நேரத்திற்கு மன்றில் ஆஜராக வேண்டும் என குறித்த சந்தேகநபருக்கு நீதிமன்றம் எச்சரித்துள்ளது.