சோதனைகளின் போது கைதான உள்ளூர் அரசியல்வாதிகளும் உறவினர்களும்

சோதனைகளின் போது கைதான உள்ளூர் அரசியல்வாதிகளும் உறவினர்களும்

எழுத்தாளர் Bella Dalima

30 Apr, 2019 | 8:21 pm

Colombo (News 1st) பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த விசாரணைகள் மற்றும் சோதனைகளின் போது, உள்ளூர் அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோட்டே மாநகர சபை உறுப்பினர் ஹாஜா மொஹைதீன் அலி உஸ்மான் நேற்று (29) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மூன்று வாள்கள், கத்தி, இராணுவக் குறிப்புகள் அடங்கிய தகடு, இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கணினி பாகங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்டுள்ள உறுப்பினர் மற்றும் அவரின் சகோதரர் ஆகியோர் தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களாக செயற்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இதேவேளை, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜூடின் கடந்த 26ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கொம்பனித்தெருவில் 46 வாள்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.

இதேவேளை, கூரிய ஆயுதம், கையடக்கத் தொலைபேசிகளுக்கான 38 மின்கலங்களுடன் நீர்கொழும்பு நகர சபையின் பிரதி மேயர் மொஹமட் அன்சார் கடந்த 27ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

வத்தளை மாபோல நகர சபையின் முன்னாள் தலைவர் மொஹமட் நவ்சார்ட்டின் சகோதரரான மொஹமட் ரிஃபாஸ் கடந்த 24ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

தொடர்பாடல் உபகரணம், வெடிபொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் இலட்சினைகள் சில அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்