by Staff Writer 30-04-2019 | 8:15 AM
Colombo (News 1st) ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 45 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
ஹதராபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான விருதிமான் சஹா 13 பந்துகளில் 28 ஓட்டங்களையும் மற்றொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர் 56 பந்துகளில் 81 ஓட்டங்களையும் பெற்றனர்.
மத்தியவரிசையில் மனிஷ் பாண்டே 36 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ஓட்டங்களை பெற்றது.
மொஹமட் ஷமி ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
213 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலளித்தாட களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 95 ஓட்டங்களுக்கு முதல் 3 விக்கெட்களையும் இழந்தது.
மயங் அகர்வால் 27 ஓட்டங்களையும் நிக்கலொஸ் பூரான் 21 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான லோகேஷ் ராகுல் 5 சிக்சர்கள் 4 பவுன்டரிகளுடன் 56 பந்துகளில் 79 ஓட்டங்களை பெற்று வெற்றிக்காக போராடினார்.
13 ஆவது ஓவரை வீசிய ரஷீட் கான் அந்த ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி வெற்றியை தமது அணிக்கு சாதகமாக்கினார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.