போக்குவரத்து தொடர்பில் விசேட பாதுகாப்பு

போக்குவரத்து தொடர்பில் விசேட பாதுகாப்பு

by Fazlullah Mubarak 29-04-2019 | 9:03 AM

உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களை அடுத்து, போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படும் பகுதிகளில் விசேட பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்தின்போது பின்பற்றவேண்டிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு தௌிவுபடுத்தியுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பயணிகள் கொண்டுசெல்லும் பொதிகள் குறித்து அவதானமாக செயற்பட வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது. அத்துடன், தமக்கு அருகில் பயணிக்கும் பயணி குறித்தும் சந்தேகத்திற்கிடமாக பயணப்பைகள் குறித்தும் அவதானமாக இருக்குமாறு பயணிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாகனத்தின் பின்புறத்தில் பயணப் பைகளை வைப்பதற்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ரயில்களில் பொதிகளை அனுப்பும் நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பிரதான ரயில் நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் பயணிகளின் பயணப்பைகள் பரிசோதிக்கப்படுவதாக ரயில்வே பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். ரயில் பயணங்களில் பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, தனியார் பஸ்களிலும் பயணப்பைகளை கொண்டுசெல்வதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. சந்தேகத்திற்கிடமான ஒருவர் பஸ்ஸில் பயணிக்கும் பட்சத்தில், அது குறித்து செயற்படும் விதம் தொடர்பிலும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களைத் தௌிவுபடுத்தியுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.