நூதனசாலைகளைப் பார்வையிட வருவோருக்கு பாதுகாப்பு

தேசிய நூதனசாலைகளைப் பார்வையிட வருவோருக்கு விசேட பாதுகாப்பு

by Staff Writer 29-04-2019 | 7:26 PM
Colombo(News 1st) கொழும்பு தேசிய நூதனசாலை மற்றும் ​தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தில் உள்ளடங்கும் அனைத்து பிராந்திய நூதனசாலைகளையும் பார்வையிட வருபவர்களுக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்தியுள்ளதாக, தேசிய அருங்காட்சியகங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, நூதனசாலைகளைப் பார்வையிடும்போது, பயணப்பொதிகளை சுமந்து செல்வதைத் தவிர்க்குமாறு, நூதனசாலைகள் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. தொப்பி, மேலங்கிகள், புர்கா மற்றும் அவசியமற்ற வாகனங்களை நூதனசாலை வளாகத்திற்குள் கொண்டுவருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு, வருகை தருவோருக்காகவும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பயணப்பொதி உள்ளிட்ட பொதிகளை பணியகத்தின் வளாகத்திற்குள் கொண்டுவருவதைத் தவிர்க்குமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், சேவை வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. முகத்தை முற்றாக மூடிய ஆடைகள், தலைக்கவசம் மற்றும் மேலங்கிகளுடன் வருகைதருவதையும் தவிர்க்குமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிக்கை ஒன்றினூடாக கோரிக்கை விடுத்துள்ளது.