கிழக்கின் 3 பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு சட்டம்

கல்முனை உள்ளிட்ட 3 பகுதிகளில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்

by Staff Writer 29-04-2019 | 6:06 PM
Colombo(News 1st) கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று (29ஆம் திகதி) மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 8 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த பகுதிகளில் நேற்று (28ஆம் திகதி) மாலை 5 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று (29ஆம் திகதி) காலை 08 மணிக்கு தளர்த்தப்பட்டது. இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 44 பேர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 15 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பின் கீழுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தேடப்பட்ட சந்தேகநபர்கள் 6 பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனைய இருவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.