குழாத்திலிருந்து நீக்கப்பட்டார் அலெக்‌ஷ் ஹேல்ஸ்?

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து குழாத்திலிருந்து அலெக்‌ஷ் ஹேல்ஸ் நீக்கம்

by Staff Writer 29-04-2019 | 9:56 PM
Colombo(News 1st) இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அலெக்‌ஷ் ஹேல்ஸ் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்துடன், அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்களிலும் அவருக்கு விளையாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான முன்னோடியாக இங்கிலாந்து பிராந்தியமட்ட போட்டிகளின்போது அலெக்‌ஷ் ஹேல்ஸ் ஒருவகை போதைப்பொருளை பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதன் காரணமாக, அலெக்‌ஷ் ஹேல்ஸுக்கு 21 நாட்கள் தடை விதிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், உலகக் கிண்ணத்துக்கான இங்கிலாந்து குழாத்திலிருந்து அலெக்‌ஷ் ஹேல்ஸ் நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (29ஆம் திகதி) அறிவித்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் நிறுவனமும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. 30 வயதான அலெக்‌ஷ் ஹேல்ஸ் இதுவரையில் 70 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்துக்காக விளையாடியுள்ளார். அதில் 6 சதங்கள் 14 அரைச்சதங்களுடன் அலெக்‌ஷ் ஹேல்ஸ் 2419 ஓட்டங்களை குவித்துள்ளார். உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 30 ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.